பின்பற்றுபவர்கள்

வியாழன், 4 மார்ச், 2021

தடைகளை தவிடுபொடியாக்கும் திருவெழுக்கூற்றிருக்கை

திருஞான சம்பந்தர் அருளிய திருவெழுக் கூற்றிருக்கை 

பாடல் தலம் : சீர்காழி 

இறைவன் : தோணியப்பர் 

பாடல் பயன்  : தொடர்ச்சியாக தடைப்படும் வேலை, படிப்பு, தேர்வு , வரன் , சுபகாரியங்கள் என   வரும் செயல்கள் அனைத்தும் தடைகள் நீங்கி சுபமாகநடந்தேறும் ; தந்தையின் உடல் நலம் பெறவும்  ,  ஒருவரது மன நலம் சீராகவும், புண்ணியம் செய்தும் பலன் இல்லாமல் தவிக்கும் நிலையிலும் இதனைப்படித்து தோணியப்பரின் நிறைந்த அருளைப்பெற்று நலமுடன் வாழலாம்.



ஓர் உரு ஆயினை ; மான்  ஆங்காரத்து 

ஈர்  இயல்பாய்  ஒரு விண்முதல்  பூதலம்  

ஒன்றிய  இருசுடர்  உம்பர்கள்  பிறவும் 

படைத்து  அளித்து  அழிப்ப மும்மூர்த்திகள்  ஆயினை ; 

இருவரோடு ஒருவன்  ஆகி நின்றனை . 

ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்

முப்பொழுது ஏத்திய  நால்வர்க்கு ஒளிநெறி 

காட்டினை ; நாட்டம் மூன்றாகக் கூட்டினை 

இருநதி  அவரமோடு ஒருமதி சூடினை ; 

ஒரு தாள் ஈர்அயில் மூவிலைச் சூலம் 

நாற்கால் மான் மாரி , ஐந்தலை அரவம் 

ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து 

இருகோட்டு ஒரு  கரி ஈடு அழித்து உரித்தனை 

ஒருதனு இருக்கால் வளைய வாங்கி, 

முப்புரத்தோடு நானிலம் அஞ்ச , 

கொன்று தலத்து உற  அவுணரை அருத்தனை 

ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம் , 

முக்குணம் , இருவளி , ஒருங்கிய வானோர் 

ஏத்த நின்றனை  ஒருங்கிய மனத்தோடு 

இருபிறப்பு ஓர்ந்து , முப்பொழுது குறை முடித்து 

நான்மறை ஓதி , ஐவகை வேள்வி 

அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி 

வரன்முறை பயின்ற எழுவான்தனை வளர்க்கும் 

பிரமபுரம் பேணினை ; 

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை ; 

இகலி அமைந்து உணர்ப்புகலி அமர்ந்தனை ; 

பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விலங்கினை ; 

பாணி மூவுலகும் புதைய , மேல் மிதந்த 

தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி 

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை ; 

வரைபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை ; 

ஒருமலை எடுத்த இருத்திரள் அரக்கன் 

விறல் கெடுத்து அருளினை ; புறவம் புரிந்தனை ; 

முந்நீர்த் துயின்றோன் , நான்முகன் அறியாப் 

பண்போடு நின்றனை சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அருவகைத் தேரரும் 

ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை; 

எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;

ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும், 

மறைமுதல் நான்கும் 

மூன்று காலமும், தோன்ற நின்றனை; 

இமையின் ஒருமையும் , ஒருமையின் பெருமையும் 

மறுஇலா மறையோர் 

கழுமல, முதுபதிக்  கவுணியன் கட்டுரை, 

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் ; 

அனைய தன்மையை ஆதலின், நின்னை 

நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே ! 


- திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 5 ஜனவரி, 2021

திருவெம்பாவை

 திருவெம்பாவை 


மாணிக்கவாசகரால் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருவெம்பாவை 20 பாடல்களைக்கொண்டது. 


திருப்பவையாய்ப் போலவே பாவைநோன்பிருக்கும் பெண்ணாக தன்னை பாவித்து சிவபெருமானது பெருமைகளைசொல்லி தோழியரை நோன்பிற்கு அழைப்பது போன்று பாடின பாடல்கள் தான் திருவெம்பாவை. 


மார்கழி மாதத்தில் திருப்பாவையும் திருவெம்பாவையும் கேட்பது போன்ற பாக்கியம் வேறெதுவுமில்லை என்கிறஅளவிற்கு  இந்த இரண்டு பாடல்களிலும் இறைவன் மேல் உள்ள பக்தியும்  அன்பும் எவரையும் மெய்மறக்க செய்திடும். 


திருவெம்பாவை முதல் பாடல்



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்


மார்கழி மாதத்தில் பெண்கள் எல்லாரும் பரம்பொருளான சிவபெருமானை நோக்கி பாவை விரதம் மேற்கொண்டுள்ளனர் 

ஆனால் ஒருத்தி மட்டும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவளை எழுப்பி விடுவதற்காக பாடுவதாக அமைந்த பாடல் இது.. 


“வாள்போன்ற அழகிய கண்களை உடைய பெண்ணே.. 

 ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெரும்ஜோதியான சிவபெருமானின் எல்லையற்ற கருணையை நாங்கள் பாடிக்கொண்டிருந்ததை  நீ கேட்டாயா? நாங்கள் பாடியது உன் காதில் விழவில்லையா? உனக்கு என்ன காது கேட்காதா? சிவபெருமானின் பெரும்புகழை நாங்கள் பாடியதை கேட்டு, தெருவில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருத்தி விம்மி விம்மி அழுது புரண்டு விழுந்து மயங்கியே போனாள். தெருவில் ஒரே சலசலப்பு!  நீ என்னடா என்றால் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறாயே.. வா.. எழுந்திரு. எங்களோடு நோன்பிருக்க வா தோழி. என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர் 


ஓம் நம சிவாய போற்றி! 🙏🙏


#அர்த்தமுள்ள_ஆன்மீகம் #மார்கழி #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்

திருப்பாவை பாடல் 1

 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; 

 நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! 

 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! 

 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், 

 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் 

 நாராயணனே, நமக்கே பறைதருவான், 

 பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.



இது திருப்பாவையின் முதல் பாடல். 

அதிகாலை நேரம். நோன்பிருக்க  உகந்த நேரம். கோபிகையான ஆண்டாள் துயில் எழுந்து நீராட தயாராகிவிட்டாள். ஆனால் அவளது சக கோபியரை இன்னும் காணோம். எனவே அவர்களை கூட்டாக அழைக்கிறாள். சிறு குழந்தையிடம்  அதற்கு பிடித்ததை சொல்லி மனம் கோணாமல் வேலை வாங்குவது போல்,   அவர்களது செல்வ சிறப்பை, சீரான அழகை சொல்லி அழைக்கிறாள்.. 


நேரிழையீர் - ‘அழகான ஆபரணங்களை அணிந்த பெண்களே’, என்கிறாள்


சீர்மல்கும் ஆயர்பாடி - சீரும் சிறப்புமான ஆயர்பாடி


செல்வ சிறுமீர்காள் - வளமான இளம்பெண்களே! என்று அழைக்கிறாள். 


சரி அழைத்தாயிற்று; எதற்காக அழைக்கிறோம் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா? 


நாராயணனுக்காக இந்நோன்பு என்கிறாள். யார் இந்த நாராயணன்? 


அதோ , மகனை எந்தவொரு தீங்கும் வாராதிருக்க எப்போதும் தன் கையில் கூரிய சிறு கத்தியை கையில் வைத்துக்கொண்டு அவனுக்கு அரணாக இருக்கிறாரே, நந்தகோபர் , அவரின் மகன்!  

கூர் வேல் கொடுந்தொழிலன் - நந்தகோபன்


பேரழகு கண்களோடு இருக்கிறாளே யசோதை- 

ஏரார்ந்த கண்ணி- அவர் தான் அவனின் அம்மா, அவரின் சிங்கக்குட்டி தான் நமது நாராயணன். 


நாராயணனா.. அவன் எப்படி இருப்பான்? 


கருகருவென அடர்ந்த மழைமேகம் போல இருப்பான்; சூரியனைப் போல ஜொலிக்கும் கண்கள், நிலவைப்போல ஒளிரும் முகம் உடையவன், என்கிறாள்


கார்மேனி - கருத்த மேகம் போன்றதொரு உடல்

செங்கண் கதிர் - சூரியனைப்போன்ற கண்கள்

மதியம் போல முகத்தான் - நிலவைப் போன்ற முகம்


அவனை நாம் நோன்பிருந்து வணங்கினால் நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றுவான். 

பறை - விருப்பம்


சீக்கிரம் எழுந்து வாருங்கள் தோழியரே! என அழைக்கிறாள் ஆண்டாள். 


பொருள்: 


தோழிகளே, 

நமது பாவை நோன்பிற்காக மார்கழி மாத முழு நிலவு நிறைந்த இந்நாளில் நீராட போகலாம் வாருங்கள்.. 

ஆயர்பாடியின் அழகிய பெண்களே, 

மகனைப் பாதுகாப்பதே தன் வேலையாக கொண்டுள்ள  நந்தகோபர் மற்றும் அழகிய கண்களை உடைய யசோதை அவர்களின் சிங்கக்குட்டி , கருமேகங்களைப் போன்ற உடலும், சூரியன் போல ஒளிரும் முகத்தையும் கொண்ட நாரயணன் நமது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவான், எனவே அனைவரும் பாராட்டும்படி நோன்பிருக்க உடனே எழுந்து வாருங்கள் தோழியரே! 


வியாழன், 15 அக்டோபர், 2020

அமாவாசையில் பௌர்ணமி! விழிக்கே அருளுண்டு!

 நாளை  அமாவாசை!

அமாவாசையில் பௌர்ணமி தெரியுமா ?! தெரியும் என்கிறார் ஒருவர்! அதுவும் பரிபூரண பௌர்ணமியாம் !

அதுவும் இது வரை எத்தனையோ பௌர்ணமிகளை பார்த்திருந்தாலும் சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர் முன்பெப்போதும் கண்டிராத ஒரு அதிசயமான பௌர்ணமியை காண கிடைக்க பெற்றார்கள். இருபது கோடி நிலவுகள் ஒன்றாக வானில் கொட்டிக் குவிந்தது போன்ற அந்த கண்கொள்ளா காட்சியை அவர்கள் காண காரணமாய் இருந்தது இரண்டு பேர்.
ஒன்று அபிராமி பட்டர்.
இன்னொன்று முதலாம் சரபோஜி மன்னர்.
இயக்கம் சாட்சாத் அன்னை அபிராமியே!
‘அபிராமி அபிராமி’ என்று சதா அவள் நினைப்பில் திருக்கடையூர் கோவிலில் இருந்தவரை, திடுதிப்பென்று அங்கு வந்த மன்னர் ‘இன்று என்ன திதி?’ என்று அவரிடம் கேட்க,
பொன்னிலவொளியான அபிராமி அவள் திருமுக நினைவில் ‘இன்று பௌர்ணமி!‘ என்று பதிலளிக்க ரணகளமாகிறது அந்த இடம்.
ஏனெனில் அன்று தை அமாவாசை!
‘பட்டரே இன்று நீர் சொன்னது போல் பௌர்ணமி வரவில்லையெனில் உங்கள் கதி அதோ கதி தான்!’ என மன்னர் மிரட்ட,
‘கதியா ?! எனக்கு ஏது கதி! என் விதியே அபிராமி அல்லவா!’ என்று அன்னையை நினைத்து மனமுருகி பாடல்களைப் பாட ஆரம்பிக்கிறார்.
79வது பாடலான
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களை செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும்கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.
என்றப் பாடலைப் பாடுகிறார்.



பாடல் பொருள் :
கருணைக்கடலான அன்னை அபிராமிவல்லியின் கண்களே போதும், அவளது பேரருள் எனக்கு கிடைத்துவிடும். அதோடு, வேதங்கள் சொன்ன முறைப்படி அவளை நெஞ்சார வழிபடலாமென எண்ணிவிட்டேன்! அப்படியிருக்க
வீண் பழி பெரும் பாவங்கள் மட்டுமே செய்து என்னை பாழ் நரகத்து குழியில் தள்ள திட்டமிடும் கயவரோடு இனி எனக்கு என்ன கூட்டு ?
பாடல் பயன் :
சர்வ சங்க பரித்யாகம் கிட்ட பாடப்படும் பாடல்
அதுவரை பட்டரின் பக்தி வெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருந்த அபிராமி இந்த பாடலை பட்டர் பாடியதை கேட்டதும் உள்ளம் குளிர தன் தோடுகளை வீசி எறிகிறார். அதுவே கோடி நிலவுகளாய் ஜொலிக்க, பட்டர் மன்னர் முதற்கொண்டு அங்கே கூடியிருந்த அனைவரும் தை அமாவாசையான அன்று பேரருள் நல்கும் அவளது திருவடிவை பேரொளியான பௌர்ணமியாய் தரிசித்தார்களாம்!!
ஓம் அபிராமவல்லி தாயே போற்றி!!

புதன், 14 அக்டோபர், 2020

துப்புடையாரை அடைவது எல்லாம்

 நம்ம எல்லாரும் பொதுவா ஒரு சமயத்துலயாவது ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் இன்சூரன்ஸ் எடுத்திருப்போம் இல்லையா ? எதுக்கு? நமக்கும் மீறிய ஏதாவது ஒரு சம்பவத்தில் நமக்கோ நம்ம உடமைகளுக்கோ ஏதாச்சும் ஆச்சுன்னா , அந்த கஷ்டமான காலத்துல நம்மையும் நம்மை சேர்ந்தவங்களையும் சுதாரிச்சுக்க ஒரு பிடிப்பு வேணும்ங்கிறதுக்காகத் தானே ?! அது மாதிரி, இந்த பாட்டு மூலமா, பெரியாழ்வாரும் நம்ம பெருமாள் கிட்ட இன்சூரன்ஸ் எடுத்துகிறார், ப்ரீமியம் - அவரின் ஆயிரம் நாமங்கள்!!!

துப்புடையாரை அடைவது எல்லாம்*

சோர்விடத்துத் துணை ஆவர் என்றே*

ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*

ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*

எய்ப்பு என்னை வந்து நலியும்போது*

அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*

அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)
பாடல் இயற்றியவர் : பெரியாழ்வார்

எப்படி வேண்டுகிறார் ?
பெருமானே! உன் அடியவர் ஆவதற்கு எனக்கு தகுதி இல்லை,
எனக்கு உன்னையன்றி வேறு வழியும் இல்ல, நம்பியவர்களை எப்போதும் காக்கும் அரங்கா, நானும் உன்னையே நம்பி கூப்பிடுகிறேன். என்னோட வயதான காலத்துல , இருக்கிற கஷ்டத்துல உன்னை நினைப்பேனோ இல்லயோ எனக்கு தெரியாது.. அதனால அப்போதைக்கும் சேர்த்து இப்போவே உன்னை மனதார கூப்பிடுகிறேன்.. எனக்கு நீயே துணை என்று மனமுருகி வேண்டி தன் அப்பழுக்கற்ற பக்தியின் மூலமா எப்போ எது நடக்கும்ன்னு தெரியாத இந்த மானுட வாழ்வின் மாயப்போக்கையும் , அதன் மீது தனக்குள்ள அங்கலாய்ப்பையும் யதார்த்தமாக இப்படி
வெளிப்படுத்துகிறார் நம்ம விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வார்!
இலக்கணப் பொருள் :
துப்பு உடையார் - உன்னால் பயனடையும் உன் அடியவர்
எய்ப்பு - தளர்வு - தள்ளாடும் முடியாத நிலை
ஒப்பிலேன் - ஒப்பு + இலேன்
ஒப்பு - ஒப்புமை - பொருத்திப் பார்த்தல்
(உன் அடியவரோடு ஒப்பிட்டால் நான் ஒன்றுமே இல்லாதவன் )
ஆனைக்கு - யானைக்கு ( கஜேந்திர்மோட்ச கதை)

திங்கள், 22 ஜூன், 2020

போற்றித் திருவகல்

திருச்சிற்றம்பலம் 

ஓம் நமசிவாய !!


மாணிக்கவாசகர் அருளிய போற்றித்திருவகவல் 

திருவாசகம் -தில்லையில் அருளியது 

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ

ஈர் அடியாலே மூவுலகு அளந்து

நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்

போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று

அடிமுடி அறியும் ஆதரவு அதனில்

கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து

ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து

ஊழி முதல்வ சயசய என்று

வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்

வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10


யானை முதலா எறும்பு ஈறாய

ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்

ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20


ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

தக்க தசமதி தாயொடு தான்படும்

துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்

ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை

ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்

காலை மலமொடு கடும்பகல் பசி நிசி

வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30


ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்

கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து

எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து

ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்

கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்

பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்

மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்

கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40


புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்

தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்

ஆறு கோடி மாயா சக்திகள்

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

விரதமே பரம் ஆக வேதியரும் 50


சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்

சமய வாதிகள் தம்தம் தங்களே

அமைவது ஆக அரற்றி மலைந்தனர்

மிண்டிய மாயா வாதம் என்னும்

சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து

உலோகா யதமெனும் ஒண்டிறப் பாம்பின்

கலா பேதத்த கடுவிடம் எய்தி

அதில் பெருமாயை எனைப்பல சூழவும்

தப்பாமே தாம் பிடித்தது சலியாத்

தழலது கண்ட மெழுகு அது போலத் 60


தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்

கொடிறும் பேதையும் கொண்டது விடாதென

படியே ஆகி நல் இடைஅறா அன்பின்

பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்

கசிவது பெருகிக் கடல் என மறுகி

அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்

சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப

நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை

பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70


சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்

கதியது பரமா அதிசயம் ஆகக்

கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது

அருபரத்து ஒருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமையைச்

சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்

பிறிவினை அறியா நிழல் அது போல

முன் பின்னாகி முனியாது அத்திசை

என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80


அன்பு எனும் ஆறு கரை அது புரள

நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி

உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப

கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்

கண்களி கூர நுண் துளி அரும்ப

சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்

தாயே ஆகி வளர்த்தனை போற்றி

மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்

கைதரவல்ல கடவுள் போற்றி

ஆடக மதுரை அரசே போற்றி 90


கூடல் இலங்கு குருமணி போற்றி

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி

மூவா நான்மறை முதல்வா போற்றி

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி

மின் ஆர் உருவ விகிர்தா போற்றி

கல் நார் உரித்த கனியே போற்றி

காவாய் கனகக் குன்றே போற்றி

ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100


இடரைக் களையும் எந்தாய் போற்றி

ஈச போற்றி இறைவா போற்றி

தேசப் பளிங்கின் திரளே போற்றி

அரைசே போற்றி அமுதே போற்றி

விரை சேர் சரண விகிர்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி

ஆதி போற்றி அறிவே போற்றி

கதியே போற்றி கனியே போற்றி

நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி

உடையாய் போற்றி உணர்வே போற்றி 110


கடையேன் அடிமை கண்டாய் போற்றி

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

குறியே போற்றி குணமே போற்றி

நெறியே போற்றி நினைவே போற்றி

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி

ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி

மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை

ஆழாமே அருள் அரசே போற்றி

தோழா போற்றி துணைவா போற்றி 120


வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

முத்தா போற்றி முதல்வா போற்றி

அத்தா போற்றி அரனே போற்றி

உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி

விரிகடல் உலகின் விளைவே போற்றி

அருமையில் எளிய அழகே போற்றி

கருமுகி லாகிய கண்ணே போற்றி

மன்னிய திருவருள் மலையே போற்றி

என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்

சென்னியில் வைத்த சேவக போற்றி 130


தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி

அழிவிலா ஆனந்த வாரி போற்றி

அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி

முழுவதும் இறந்த முதல்வா போற்றி

மான்நேர் நோக்கி மணாளா போற்றி

வான்அகத்து அமரர் தாயே போற்றி

பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140


வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவர் உள்ளதது அமுதே போற்றி

கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி

நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி

இடைமருது உறையும் எந்தாய் போற்றி

சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீர் ஆர் திருவையாறா போற்றி

அண்ணாமலை எம் அண்ணா போற்றி

கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150


ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி

பாகம் பெண் உரு ஆனாய் போற்றி

பராய்த் துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி

குற்றாலத்து எம் கூத்தா போற்றி

கோகழி மேவிய கோவே போற்றி

ஈங்கோய் மலை எந்தாய் போற்றி

பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160


அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி

இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு

அத்திக்கு அருளிய அரசே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி

என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

அருளிட வேண்டும் அம்மான் போற்றி

இருள் கெட அருளும் இறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170


களம் கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி

நித்தா போற்றி நிமலா போற்றி

பத்தா போற்றி பவனே போற்றி

பெரியாய் போற்றி பிரானே போற்றி

அரியாய் போற்றி அமலா போற்றி

மறையோர் கோல நெறியே போற்றி

முறையோ தரியேன் முதல்வா போற்றி 180


உறவே போற்றி உயிரே போற்றி

சிறவே போற்றி சிவமே போற்றி

மஞ்சா போற்றி மணாளா போற்றி

பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

இலங்கு சுடர் எம் ஈசா போற்றி

சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி

குவைப்பதி மலிந்த கோவே போற்றி

மலை நாடு உடைய மன்னே போற்றி

கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190


திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி

பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி

மருவிய கருணை மலையே போற்றி

துரியமும் இறந்த சுடரே போற்றி

தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி

தேளா முத்தச் சுடரே போற்றி

ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி

ஆரா அமுதே அருளா போற்றி

பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200


தாளி அறுகின் தாராய் போற்றி

நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி

சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி

மந்திர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி

அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி

கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி

இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210


படி உறப் பயின்ற பாவக போற்றி

அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி

நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்

பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி

ஒழவற நிறைந்த ஒருவ போற்றி

செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி

கழு நீர் மாலைக் கடவுள் போற்றி

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி

பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்

குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220


புரம்பல் எரித்த புராண போற்றி

பரம் பரம் சோதிப் பரனே போற்றி

போற்றி போற்றி புயங்கப் பெருமான்

போற்றி போற்றி புராண காரண

போற்றி போற்றி சய சய போற்றி 225

திருநீற்றுப்பதிகம்!

ஓம் நமசிவாய! 

திருச்சிற்றம்பலம்!

திருஞான சம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம்

தேவாரம் -இரண்டாம் திருமுறை 

பாடப்பெற்ற தலம்- தென் திருவாலவாய் சுவாமி திருக்கோவில் , மதுரை

பாடல் பயன் : தீராத உடல் மற்றும் தோல் நோய்கள் அகல

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

முத்தி திருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்குத் திருமேனி ஆலவாயான் திருநீறே.

மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்!

படத்தில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்


சிவபுராணம்!

ஓம் நமசிவாய போற்றி!!!

மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்

 திருவாசகம்- எட்டாம் திருமுறை

(திருப்பெருந்துறையில் அருளியது - தற்சிறப்புப் பாயிரம்)

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ⁠5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ⁠10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ⁠15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். ⁠20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் ⁠25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ⁠35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ⁠40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ⁠45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை ⁠50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, ⁠55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் ⁠60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் ⁠65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே ⁠70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ⁠80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று ⁠85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ⁠90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. ⁠95


(படத்தில், திருப்பெருந்துறை ஆவுடையார்)




வெள்ளி, 19 ஜூன், 2020

கோளறு திருப்பதிகம்!

கோளறு திருப்பதிகம் 

இயற்றி அருளியவர் : திருஞான சம்பந்தர் 


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே 
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 01

என்பொடுகொம்போடு ஆமை  இவை மார்பில் இலங்க 
எருது ஏறி ஏழை உடனே  
பொன் பொதிமத்தமாலை புனல் சூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டோடு ஆறும் 
உடனாய நாள்கள் இவை தாம் 
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 02

உருவலர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 03

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறை ஓதும் எங்கள்  பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா மிகவே. 04

நஞ்சணிகண்டன் எந்தை  மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் இரும் இடியும் மின்னும் 
மிகையான பூதம் அவையும் 
அஞ்சிடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 05

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 06

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வன் அடைவார் 
ஒப்பிள மதியுமப்பும் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 07

வேள்பட விழிசெய்தன்று விட மேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல்சூழ் இலங்கை அரையன்றனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 08

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சல மகளோடெருக்கு முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 09

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும்  மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
புத்தரோடும் அணைவாதில் அழிவிக்கும்  அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 10

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும்  அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே. 11

ஹனுமன் சாலீஸா - எளிய தமிழில் !

ஸ்ரீ ஹனுமன் சாலீசா 


இயற்றி அருளியவர் - துளசி தாசர் 


*த்யானம் விருத்தம்* 

மாசற்ற மனதுடனே ஸ்ரீ ராமனைப் பாட 
குருநாதனே துணை வருவாய் (2) 
வாயுபுத்ரனே வணங்கினேன் (2) 
ஆற்றலும் ஞானமும் வரமும் தர 
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே  

ஜெயஹனுமானே! ஞானக்கடலே!
உலகத்தின் ஒளியே! உமக்கு வெற்றியே! (1) 

ராம தூதனே! ஆற்றலின் வடிவமே! 
அஞ்சனை மைந்தனே! வாயு புத்ரனே! (2) 

மகா வீரனே! மாருதி தீரனே!
ஞானத்தைத் தருவாய் ! நன்மையை சேர்ப்பாய் (3) 

தங்க மேனியில் குண்டலம் மின்ன, 
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர (4)

தோளிலே முப்புரி நூல் அணி செய்ய, 
இடியும் கொடியும் கரங்களில் தவழ (5) 

சிவனின் அம்சமே! கேசரி மைந்தனே! 
உன் ப்ராதாபமே! உலகமே வணங்கும்! (6)

அறிவில் சிறந்தவா! சாதுர்யம் நிறைந்தவா!
ராம சேவையே சுவாசமானவா! (7) 

உன் மனக்கோவிலில் ராமனின் வாசம்! 
ராமனின் புகழைக் கேட்பது பரவசம்! (8)

ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2) 

உன் சிறுவடிவை சீதைக்குக் காட்டினாய், 
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)

அரக்கரை அழித்த பராக்ரம சாலியே 
ராமனின் பணியை முடித்த மாருதியே (10)

ராமன் அணைப்பில் ஆனந்த மாருதி 
லக்ஷ்மணன் ஜீவனைக் காத்த சஞ்சீவி! (11) 

உனது பெருமையை ராமன் புகழ்ந்தான், 
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்! (12)

ஆயிரம் தலைக்கொண்ட சேஷனும் புகழ்ந்தான் 
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13) 

மூவரும் முனிவரும் ஸனக ஸநந்தரும் 
நாரதர் சாரதை ஆதி சேஷனும் (14) 

எம குபேர திக்பாலரும் புலவரும் 
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ (15) 

சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய் 
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய் (16) 

ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2) 

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும் 
உன் திறத்தாலே, உன் அருளாலே! (17)

கதிரவனைக் கண்ட கவி வேந்தனே 
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே! (18)

முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய் 
கடலைக் கடந்து ஆற்றலைக் காட்டினாய் (19) 

உன்னருளால் முடியாதது உண்டோ ?!
மலையும் கடுகென மாறி விடாதோ?! (20)

ராம ராஜ்யத்தின் காவலன் நீயே! 
ராமனின் பக்த்தர்க்கு எளியவன் நீயே! (21) 

சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்! 
கண் இமைப் போலக் காத்தே அருள்வாய்! (22)

உனது வல்லமை சொல்லத் தகுமோ?!
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே! (23)

உன் திருநாமம் ஒன்றே போதும் 
தீய சக்திகள் பறந்தே போகும்!(24) 

ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2) 

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்கும் 
துன்பங்கள் விலகுமே! இன்பங்கள் சேர்க்குமே !(25)

மனம் மெய்மொழியும் உந்தன் வசமே ! 
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே! (26) 

பக்தர்கள் தவத்தில் ராம நாமமே! 
ராமனின் பாதமே! உந்தன் இடமே! (27) 

அடியவர் நிறைவே! கற்பகத்தருவே! 
இறையனுபூதியை தந்திடும் திருவே! (28) 

நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்! 
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்! (29) 

ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்!
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்! (30)

அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே!
அன்னை ஜானகி தந்தாள் வரமே!(31)

ராம பக்தியின் சாரம் நீயே!
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே!(32)

ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2) 

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான் 
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்!(33)

ராம நாமமே வாழ்வில் உறுதுணை 
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை?! (34)

என் மனக்கோவிலில் தெய்வமும் நீயே!
உன்னையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே!(35)

நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய் 
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்! (36) 

ஜெய ஜெய ஜெய ஜெய ஸ்ரீ ஹனுமானே !
ஜகத்தின் குருவே! ஜெயம் தருவாயே! (37)

"ஹனுமன் சாலீசா" அனுதினம் பாடிட 
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்! (38)

சிவபெருமானும் அருள் மழை பொழிவான்!
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்! (39)

அடியவர் வாழ்வில் ஹனுமானின் அருளே! 
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே! (40) 

ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2) 





வியாழன், 18 ஜூன், 2020

கணேஷ பஞ்சரத்தினம் - எளியத் தமிழில்

கணேஷ பஞ்சரத்தினம் 

இயற்றி அருளியது - ஆதி சங்கரர் 


முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி சாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம் 
அநாய கைக நாயகம் விநாசி தேப தைத்யகம் 
நதாசு பாசு நாசகம் நமாமி தம் விநாயகம் - 1

நதேத ராதி பீக்கரம் நவோதி தார்க பாஸ்வரம் 
நமத் ஸுராரி நிர்ஜரம் நதாத்தி காப துத்தரம் 
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் 
மஹேஸ்வரம் ஸமாஸ்ஷ்ரயே பராத்பரம் நிரந்தரம் -2

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம் 
தரேதரோ தரம் வரம் வரே பவக்த்ர மக்ஷ்ரம் 
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் 
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் -3 

அகிம் chச நார்த்தி மார்ஜநம் சிரந்த நோக்த்தி பாஜநம் 
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் 
பிரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ச யாதி பூஷணம் 
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம் - 4 

நிதாந்த காந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம் 
அசிந்த்ய ரூபா மந்த ஹீந மந்தராய க்ருந்தனம் 
ஹ்ருந்தந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம் 
தமேக தந்த மேவ தம் விசிந்திய யாமோ ஸந்ததம் -5 

**பலன்*** 
மஹாகணேஷ பஞ்சரத்தின மாதரேண யோன் வஹம் 
ப்ரஜல்பதி ப்ரபாதகே  ஹ்ரீதீஸ்மரம்  கணேஸ்வரம் 
அரோக தாம தோஷ தாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் 
ஸமாஹி தாயு ரஷ்ட பூதி மப்யுபைதி ஸோச்சிராத்!  -6 

   

விநாயகர் கவசம் - சீர் பிரித்தது

வளர்சிகையை பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க! 

வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்திர தேகம் மதோற்கடர் தாம்  அமர்ந்து காக்க! 

விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க! 

புருவம் தமைத் தளர்வில் மகோதரர் காக்க! 

தடவிழிகள்  பாலச்சந்திரனார் காக்க! 

கவின் வளரும் ஆதாரம் கஜமுகர் காக்க! 

தால் அங்கணக்டரீடர்  காக்க! 

நவில் சிபுகம் கிரிசைசுதர் காக்க! 

தனி வாக்கை விநாயகர் தாம் காக்க! 

அவிர்நகை துன்முகர் காக்க! 

அள் எழில் செஞ்செவி பாசபாணி காக்க! 

தவிர்தலுறும் இளங்கொடி போல் வளர்மணி நாசியைத் சிந்தி தார்த்தர் காக்க! 

காமரு பூ முகம் தன்னைக் குணேசர் நனிக் காக்க! 

களம் கணேசர் காக்க! 

வாமமுறும் இரு தோலும் வயங்கு கந்த பூர்வசர்தாம் மகிழ்ந்து காக்க! 

ஏமமுறு மணிமலை விக்கின விநாசன் காக்க! 

இதயம் தன்னைத் தோமகலும் கண நாதர் காக்க! 

அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க! 

பக்கம் இரண்டையும் தராதரர் காக்க! 

பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க! 

விளங்கிலிங்கம் வியாள பூடணர்தாம் காக்க! 

தக்கக்குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க! 

கச்சனத்தை அல்லல் உக்க கணபன் காக்க  

ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க! 

தாழ் முழந்தாள் மகா புத்தி காக்க! 

இருபதாம் ஏகதந்தர் காக்க!

வாழ்கரம் சுப்பிரப்பிரசாதனர் காக்க! 

முன்கையை வணங்குவார் நோய் ஆழ் தரச்செய் ஆசாபூரகக் காக்க! 

விரல் பதுமத்தர் காக்க! 

கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க! 

கிழக்கினில் புத்தீசர் காக்க! 

அக்கினியில் சித்தீசர் காக்க! 

மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க! 

விக்கினவர்த்தனர் மேற்க்கென்னும் திக்கு அதனிற் காக்க ! 

வாயுவில் கசகன்னர் காக்க! 

திகழ் உதீசி தக்க நிதிபன் காக்க! 

வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க! 

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க! 


இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க! 

இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய் இவையாதி 
உயிர் திறத்தால் வரும் துயரும் முடிவில்லாத வேகமுறும் பிணி பலவும் 
விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க! 

மதி ஞானம் தவம் தானம் மானம் ஒளி புகழ் குளம் வண்சரீரம் முற்றும் 

பதிவான தனம் தானியம் கிரகம் மனைவி மைந்தர் 

பயில் நட்பாதிக கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க! 

காமர் பவித்திரர் முன்னான விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர் 
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க! 

வென்றி சீவிதம் பகபிலர் காக்க! 

கரியாதி எல்லாம் விகடர் காக்க! 

என்று இவ்வாறு இதனை முக்காலமும் ஓதிடின்; நும்பால் 
இடையூறு ஒன்றும் உறா! 
முனிவர்காள்; அறிமின்கள்; யார் ஒருவர் ஓதினாலும் 
அன்று ஆங்கவர் தேகம் பிணியற  வச்சிரதேகம் ஆகி மன்னும்! 

**************************************************

பக்தியுடனே இக்கவசத்தை பாராயணம் செய்பவர்களுக்குப் 

பிணியும் வறுமையும் பேய் பூதங்களால் உண்டாகின்ற பல 
துன்பங்களும் கவலைகளும் பாவம் முதலியவைகளும் நீங்கும். 
பெரும் செல்வமும் தீர்க்காயுளும் களத்திர புத்திர மித்திராதிகளும் 
உண்டாகும். இதைப் படித்தாலும் ஒருவர் சொல்லக் கேட்டாலும் 
பூசித்தாலும் எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும்!  

விநாயகர் அகவல் - சீர் பிரித்தது

விநாயகர் அகவல் 

இயற்றி அருளியவர் : அவ்வையார் 



சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்து  அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்⁠   05

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் ⁠ 10

இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழம்  நுகரும் மூஷிக வாகன! ⁠ 15

இப்பொழது என்னை  ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்  தான் எழுந்தருளி 
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் 
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து ⁠20

குரு வடிவாகிக் குவலயம்  தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து  எனக்கருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் ⁠25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும்  கருத்தினை அறிவித்து 
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து ⁠30

தலமொரு நான்கும் தந்தெனக்கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் ⁠35

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே 
இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் ⁠40

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே 
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும் 
எண் முகமாக இனிதெனக் கருளிப் ⁠50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி 
என்னை அறிவித்(து) எனக்கருள் செய்து ⁠55
 
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன்  சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி இரண்டுக்கும்  ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் ⁠60

எல்லை யில்லா ஆனந்தம் அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் ⁠65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் ⁠70

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! ⁠