நம்ம எல்லாரும் பொதுவா ஒரு சமயத்துலயாவது ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் இன்சூரன்ஸ் எடுத்திருப்போம் இல்லையா ? எதுக்கு? நமக்கும் மீறிய ஏதாவது ஒரு சம்பவத்தில் நமக்கோ நம்ம உடமைகளுக்கோ ஏதாச்சும் ஆச்சுன்னா , அந்த கஷ்டமான காலத்துல நம்மையும் நம்மை சேர்ந்தவங்களையும் சுதாரிச்சுக்க ஒரு பிடிப்பு வேணும்ங்கிறதுக்காகத் தானே ?! அது மாதிரி, இந்த பாட்டு மூலமா, பெரியாழ்வாரும் நம்ம பெருமாள் கிட்ட இன்சூரன்ஸ் எடுத்துகிறார், ப்ரீமியம் - அவரின் ஆயிரம் நாமங்கள்!!!
துப்புடையாரை அடைவது எல்லாம்*
சோர்விடத்துத் துணை ஆவர் என்றே*
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*
எய்ப்பு என்னை வந்து நலியும்போது*
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)
எப்படி வேண்டுகிறார் ?
பெருமானே! உன் அடியவர் ஆவதற்கு எனக்கு தகுதி இல்லை,
எனக்கு உன்னையன்றி வேறு வழியும் இல்ல, நம்பியவர்களை எப்போதும் காக்கும் அரங்கா, நானும் உன்னையே நம்பி கூப்பிடுகிறேன். என்னோட வயதான காலத்துல , இருக்கிற கஷ்டத்துல உன்னை நினைப்பேனோ இல்லயோ எனக்கு தெரியாது.. அதனால அப்போதைக்கும் சேர்த்து இப்போவே உன்னை மனதார கூப்பிடுகிறேன்.. எனக்கு நீயே துணை என்று மனமுருகி வேண்டி தன் அப்பழுக்கற்ற பக்தியின் மூலமா எப்போ எது நடக்கும்ன்னு தெரியாத இந்த மானுட வாழ்வின் மாயப்போக்கையும் , அதன் மீது தனக்குள்ள அங்கலாய்ப்பையும் யதார்த்தமாக இப்படி
வெளிப்படுத்துகிறார் நம்ம விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வார்!
இலக்கணப் பொருள் :
துப்பு உடையார் - உன்னால் பயனடையும் உன் அடியவர்
எய்ப்பு - தளர்வு - தள்ளாடும் முடியாத நிலை
ஒப்பிலேன் - ஒப்பு + இலேன்
ஒப்பு - ஒப்புமை - பொருத்திப் பார்த்தல்
(உன் அடியவரோடு ஒப்பிட்டால் நான் ஒன்றுமே இல்லாதவன் )
ஆனைக்கு - யானைக்கு ( கஜேந்திர்மோட்ச கதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக