பின்பற்றுபவர்கள்

வியாழன், 15 அக்டோபர், 2020

அமாவாசையில் பௌர்ணமி! விழிக்கே அருளுண்டு!

 நாளை  அமாவாசை!

அமாவாசையில் பௌர்ணமி தெரியுமா ?! தெரியும் என்கிறார் ஒருவர்! அதுவும் பரிபூரண பௌர்ணமியாம் !

அதுவும் இது வரை எத்தனையோ பௌர்ணமிகளை பார்த்திருந்தாலும் சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர் முன்பெப்போதும் கண்டிராத ஒரு அதிசயமான பௌர்ணமியை காண கிடைக்க பெற்றார்கள். இருபது கோடி நிலவுகள் ஒன்றாக வானில் கொட்டிக் குவிந்தது போன்ற அந்த கண்கொள்ளா காட்சியை அவர்கள் காண காரணமாய் இருந்தது இரண்டு பேர்.
ஒன்று அபிராமி பட்டர்.
இன்னொன்று முதலாம் சரபோஜி மன்னர்.
இயக்கம் சாட்சாத் அன்னை அபிராமியே!
‘அபிராமி அபிராமி’ என்று சதா அவள் நினைப்பில் திருக்கடையூர் கோவிலில் இருந்தவரை, திடுதிப்பென்று அங்கு வந்த மன்னர் ‘இன்று என்ன திதி?’ என்று அவரிடம் கேட்க,
பொன்னிலவொளியான அபிராமி அவள் திருமுக நினைவில் ‘இன்று பௌர்ணமி!‘ என்று பதிலளிக்க ரணகளமாகிறது அந்த இடம்.
ஏனெனில் அன்று தை அமாவாசை!
‘பட்டரே இன்று நீர் சொன்னது போல் பௌர்ணமி வரவில்லையெனில் உங்கள் கதி அதோ கதி தான்!’ என மன்னர் மிரட்ட,
‘கதியா ?! எனக்கு ஏது கதி! என் விதியே அபிராமி அல்லவா!’ என்று அன்னையை நினைத்து மனமுருகி பாடல்களைப் பாட ஆரம்பிக்கிறார்.
79வது பாடலான
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களை செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும்கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.
என்றப் பாடலைப் பாடுகிறார்.



பாடல் பொருள் :
கருணைக்கடலான அன்னை அபிராமிவல்லியின் கண்களே போதும், அவளது பேரருள் எனக்கு கிடைத்துவிடும். அதோடு, வேதங்கள் சொன்ன முறைப்படி அவளை நெஞ்சார வழிபடலாமென எண்ணிவிட்டேன்! அப்படியிருக்க
வீண் பழி பெரும் பாவங்கள் மட்டுமே செய்து என்னை பாழ் நரகத்து குழியில் தள்ள திட்டமிடும் கயவரோடு இனி எனக்கு என்ன கூட்டு ?
பாடல் பயன் :
சர்வ சங்க பரித்யாகம் கிட்ட பாடப்படும் பாடல்
அதுவரை பட்டரின் பக்தி வெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருந்த அபிராமி இந்த பாடலை பட்டர் பாடியதை கேட்டதும் உள்ளம் குளிர தன் தோடுகளை வீசி எறிகிறார். அதுவே கோடி நிலவுகளாய் ஜொலிக்க, பட்டர் மன்னர் முதற்கொண்டு அங்கே கூடியிருந்த அனைவரும் தை அமாவாசையான அன்று பேரருள் நல்கும் அவளது திருவடிவை பேரொளியான பௌர்ணமியாய் தரிசித்தார்களாம்!!
ஓம் அபிராமவல்லி தாயே போற்றி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக