மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
இது திருப்பாவையின் முதல் பாடல்.
அதிகாலை நேரம். நோன்பிருக்க உகந்த நேரம். கோபிகையான ஆண்டாள் துயில் எழுந்து நீராட தயாராகிவிட்டாள். ஆனால் அவளது சக கோபியரை இன்னும் காணோம். எனவே அவர்களை கூட்டாக அழைக்கிறாள். சிறு குழந்தையிடம் அதற்கு பிடித்ததை சொல்லி மனம் கோணாமல் வேலை வாங்குவது போல், அவர்களது செல்வ சிறப்பை, சீரான அழகை சொல்லி அழைக்கிறாள்..
நேரிழையீர் - ‘அழகான ஆபரணங்களை அணிந்த பெண்களே’, என்கிறாள்
சீர்மல்கும் ஆயர்பாடி - சீரும் சிறப்புமான ஆயர்பாடி
செல்வ சிறுமீர்காள் - வளமான இளம்பெண்களே! என்று அழைக்கிறாள்.
சரி அழைத்தாயிற்று; எதற்காக அழைக்கிறோம் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா?
நாராயணனுக்காக இந்நோன்பு என்கிறாள். யார் இந்த நாராயணன்?
அதோ , மகனை எந்தவொரு தீங்கும் வாராதிருக்க எப்போதும் தன் கையில் கூரிய சிறு கத்தியை கையில் வைத்துக்கொண்டு அவனுக்கு அரணாக இருக்கிறாரே, நந்தகோபர் , அவரின் மகன்!
கூர் வேல் கொடுந்தொழிலன் - நந்தகோபன்
பேரழகு கண்களோடு இருக்கிறாளே யசோதை-
ஏரார்ந்த கண்ணி- அவர் தான் அவனின் அம்மா, அவரின் சிங்கக்குட்டி தான் நமது நாராயணன்.
நாராயணனா.. அவன் எப்படி இருப்பான்?
கருகருவென அடர்ந்த மழைமேகம் போல இருப்பான்; சூரியனைப் போல ஜொலிக்கும் கண்கள், நிலவைப்போல ஒளிரும் முகம் உடையவன், என்கிறாள்
கார்மேனி - கருத்த மேகம் போன்றதொரு உடல்
செங்கண் கதிர் - சூரியனைப்போன்ற கண்கள்
மதியம் போல முகத்தான் - நிலவைப் போன்ற முகம்
அவனை நாம் நோன்பிருந்து வணங்கினால் நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றுவான்.
பறை - விருப்பம்
சீக்கிரம் எழுந்து வாருங்கள் தோழியரே! என அழைக்கிறாள் ஆண்டாள்.
பொருள்:
தோழிகளே,
நமது பாவை நோன்பிற்காக மார்கழி மாத முழு நிலவு நிறைந்த இந்நாளில் நீராட போகலாம் வாருங்கள்..
ஆயர்பாடியின் அழகிய பெண்களே,
மகனைப் பாதுகாப்பதே தன் வேலையாக கொண்டுள்ள நந்தகோபர் மற்றும் அழகிய கண்களை உடைய யசோதை அவர்களின் சிங்கக்குட்டி , கருமேகங்களைப் போன்ற உடலும், சூரியன் போல ஒளிரும் முகத்தையும் கொண்ட நாரயணன் நமது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவான், எனவே அனைவரும் பாராட்டும்படி நோன்பிருக்க உடனே எழுந்து வாருங்கள் தோழியரே!