திருவெம்பாவை
மாணிக்கவாசகரால் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருவெம்பாவை 20 பாடல்களைக்கொண்டது.
திருப்பவையாய்ப் போலவே பாவைநோன்பிருக்கும் பெண்ணாக தன்னை பாவித்து சிவபெருமானது பெருமைகளைசொல்லி தோழியரை நோன்பிற்கு அழைப்பது போன்று பாடின பாடல்கள் தான் திருவெம்பாவை.
மார்கழி மாதத்தில் திருப்பாவையும் திருவெம்பாவையும் கேட்பது போன்ற பாக்கியம் வேறெதுவுமில்லை என்கிறஅளவிற்கு இந்த இரண்டு பாடல்களிலும் இறைவன் மேல் உள்ள பக்தியும் அன்பும் எவரையும் மெய்மறக்க செய்திடும்.
திருவெம்பாவை முதல் பாடல்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்
மார்கழி மாதத்தில் பெண்கள் எல்லாரும் பரம்பொருளான சிவபெருமானை நோக்கி பாவை விரதம் மேற்கொண்டுள்ளனர்
ஆனால் ஒருத்தி மட்டும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவளை எழுப்பி விடுவதற்காக பாடுவதாக அமைந்த பாடல் இது..
“வாள்போன்ற அழகிய கண்களை உடைய பெண்ணே..
ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெரும்ஜோதியான சிவபெருமானின் எல்லையற்ற கருணையை நாங்கள் பாடிக்கொண்டிருந்ததை நீ கேட்டாயா? நாங்கள் பாடியது உன் காதில் விழவில்லையா? உனக்கு என்ன காது கேட்காதா? சிவபெருமானின் பெரும்புகழை நாங்கள் பாடியதை கேட்டு, தெருவில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருத்தி விம்மி விம்மி அழுது புரண்டு விழுந்து மயங்கியே போனாள். தெருவில் ஒரே சலசலப்பு! நீ என்னடா என்றால் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறாயே.. வா.. எழுந்திரு. எங்களோடு நோன்பிருக்க வா தோழி. என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர்
ஓம் நம சிவாய போற்றி! 🙏🙏
#அர்த்தமுள்ள_ஆன்மீகம் #மார்கழி #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்